சனி, 8 டிசம்பர், 2012

இவ்வுலகமும் அவ்வுலகமும்

அமெரிக்காவின்  ஸான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் ஜேக் நடந்துகொண்டிருந்தான். மனம் போன போக்கில் கால்போன போக்கில் என்பார்களே அது போல நடந்து கொண்டிருந்தான். அவன் அப்படி நடந்த வருடம் 1949.அவனை வறுமை பிடித்து ஆட்டியது.

அடுத்த வேளைப் பசிக்கு என்ன செய்யப்போகிறோம்? அவனுடைய திருமண வாழ்க்கை இனிக்கவில்லை. 

அவனுடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல துணி எடுத்துக்கொடுக்க வழியில்லை; குழந்தைகளே, என்ன‌ அப்பா? என்ற வெறுப்பான பார்வையை வீசியது அவனை மிகவும்நொந்துபோக வைத்திருந்தது.

வேலை தேடி அலையாத இடமில்லை; ஏறி இறங்காத நிறுவனங்கள் இல்லை; சலிப்பு ஏற்பட்டு வாழ்க்கையை வெறுத்தவனாக கால்கள் கடற்கரையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.  நாக்கு வறண்டு
தண்ணீருக்காக ஏங்குகிறது.

ஒருகணம் கடலை நின்று பார்க்கிறான்.  கண்ணுக்கு எட்டியமட்டும்  தண்ணீர். ஆனால் தவித்த வாய்க்கு இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியுமா? ஓரிடத்தில் நின்று கடலை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  

அவனுடைய வாழ்க்கைத் தாகத்தை முழுவதும் தீர்க்கப்போகும் விடை அவனுக்குக் கிடைக்கப் போவது தெரியாமல் முழங்கால் அளவு தண்ணீரில் நிற்கிறான். குனிந்து ஒருகை நீரை அள்ளுகிறான்.

அவன் அப்படித் தண்ணீரை அள்ளிய பொழுது ஒரு பாட்டில் மிதப்பது அவனது பார்வையில் படுகிறது.

தண்ணீரை உதறிவிட்டு அந்தப் பாட்டிலை எடுத்துப் பார்க்கிறான்.  அந்தப் பாட்டிலுக்குள் ஒரு காகிதம் இருப்பது தெரிகிறது. பாட்டில் மூடியைத் திறந்து அந்தக் காகித்தத்தை எடுத்துப் படிக்கிறான்.
அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அள‌வே இல்லை. மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவுகிறான், சந்தோசத்தில்!

அந்தப்பாட்டிலில் எழுதி இருந்தது இதுதான். "என் பெயர் டெய்சி சிங்கர் அலெக்சாண்டர். இந்தக் கடிதம் கிடைக்கும் நபர் அதிர்ட்ட சாலி.  என்னுடைய சொத்தை இந்தத் துண்டுக் 
காகிதம் கிடைப்பவரும் எனது வழக்கறிஞர் பி.கோவின் ஆகிய இருவரும் சரிபாதியாக பிரித்து எடுத்து அனுபவிக்கலாம்,-ஜூன்,30, 1936" என்று எழுதி கையொப்பமிட்டு இருந்தார்.

ஜேக் வுர்ம் இதன் பிறகு ஒரு வழக்கறிஞர் நண்பரைப் பிடித்து வெகு  சிரமப்பட்டு அந்தக் க‌டிதத்தை எழுதிய மூலத்தைக் கண்டுபிடித்தார். டெய்சி சிங்கர் அலெக்சாண்டர் லண்டன்வாசி.  சாதாரண ஆளில்லை.சிங்கர் தையல் மிசின் நிறுவன பங்குதரகளில் ஒருவர்!  ஜேக்குக்கு கிடைத்தது சுமார் 6 மில்லியன் டாலர்கள்! அதுமட்டுமல்ல வருடம் தோறும் $ 80,000 டாலர்கள் அதன் ஸ்டாக் மார்க்கெட்டிலிருந்துவருடாவருடம் நிலவரத்துக்கு ஏற்ப கூடவோ குறைத்தோ கிடைக்கும்.

டெய்சி சிங்கர் அலெக்சாண்டர் தாம் இறந்த பின்பு தம்முடைய சொத்துக்களை யாருக்குக் கொடுப்பது ? என்று பலவாறாக யோசிக்கிறார். உறவினருக்கு கொடுப்பதா? நண்பர்களுக்கு 
கொடுப்பதா? மக்கள் நலம் பேணும் தன்னார்வல நிறுவனங்களுக்குக் கொடுப்பதா? இறுதியாக 
ஒரு முடிவு எடுக்கிறார். தமது சொத்தை நிர்வகிக்கும் வழக்கறிஞருக்கும் முகம் தெரியாத ஒரு 
தேவையுள்ள ஏழைக்கும் சரிபாதியாகப் போய்ச் சேரவேண்டும் என்று முடிவு செய்கிறார்.

அதன்படி மேலே சொன்ன கடிதத்தை எழுதி ஒரு கண்ணாடிக்குடுவையில் வைத்து தேம்சு நதியின் நீரோட்டப் பகுதியில் வீசுகிறார்.  வீசியது 1937ம் வருடம் ஜூன் மாதம் 20ம் தேதி. 
கடலாராய்வாளர்கள் கருத்தின்படி இது வட கடலுக்குச் சென்று ஸ்காண்டினேவியா, ரசியா, மற்றும் சைபீரிய கடல் பயணம் மேற்கொண்டு பசிபிக்பெருங்கடலில் சங்கமித்து சுமார் 12 
வருடங்களுக்கு மேல் பயணித்து சான் பிரான்சிசுகோவை அடைந்திருக்கிறது.

அதுவும் டெய்சியின் கனவுப்படி ஒரு பென்னி கூட கையில் இல்லாமல் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திலிருந்த‌ ஜேக்கிற்கு இந்த யோகம் கிடைத்திருக்கிறது.

டெய்சி தன் உயிலை ஒரு கண்ணாடிக் குடுவையில் போட வேண்டிய அவசியம் என்ன? அவர் மரணிக்கும்போது தம்மோடு ஒரு பைசாவைக்கூட உடன் எடுத்துப் போகமுடியாது என்பது 
தெரியும். அதனால்தான் அவர் அதை தாம் விரும்பியவண்ணம் இந்த உலகில் பிறருக்குப் பயன்படும்படி செய்தது அவர் எண்ணியவாறே ஒரு தேவையுள்ள‌ மனிதருக்குப் பயன்பட்டது. 

ஜேக்கும் அவருடைய காலத்துக்குப் பின் அந்தச் சொத்துல் சிறு துளியளவும் எடுத்துச் செல்ல முடியாது. ஜேக் மட்டுமல்ல நாமும் நம் இறப்பிற்குப் பின் எதையும் நம்மோடு எடுத்துச் செல்ல முடியாது.

டெய்சி செய்தது போல நாம் ஒரு கண்ணாடிக்குடுவையையும் ஒரு கடலில் கலக்கும் நதியை நாம் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. நாம் வாழுகிற காலத்தில் நம்மால் 
முடிந்த உதவிகளை எதுவுமே முடியாதவர்களுக்காகச் செய்வோம்; நமக்குப் பிறகு தேவையுள்ளவர்களுக்கு நம் உழைப்பால் கிடைத்த சேமிப்பை அளித்து இறைவனின் நித்திய வாழ்க்கையில் நாம் இணைய முடியும்.  "உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின் செல்," என்ற‌
ஆண்டவர் யாருக்கோ சொன்னதல்ல; நமக்காகச் சொன்னதுதான்! இவ்வுலகத்தில் நாம் 
செய்வதால் அவ்வுலகத்தில் அதன் பலனைப் பெறுவோம்.

நம்ம ஊர்ல சில பேர் இருக்காங்க; அவங்க உதவின்னு போய்க் கேட்டா மறுக்காமச் செய்யிறாங்க. அவங்களுக்கெல்லாம் அவ்வுலகத்தில் அருமையான வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டுன்னார் ஒருத்தர்! 


இன்னொருத்த‌ர் கேட்டார். எங்க ஊர்லயும் ஒருத்தர் இருக்கார். எந்த உதவி போய்க் கேட்டாலும் கேக்கிறவங்க அசந்து போறமாதிரி உதவி செஞ்சுருவார்ன்னார்," அவர்.


அப்படியா பரவாயில்லையேன்னார் இவர்.


"உதாரணத்துக்கு ஒன்னச் சொன்னா நீங்களும் அசந்துபோவீங்கன்னார், "அவர்.


"அடடே சொல்லுங்க கேப்போம்னார்,"இவர்.


"ஊர்ல  நீச்சல் குளம் கட்டலாம்ன்னு இருக்கோம். பெரிய மனசு பண்ணி ஒங்களால முடிஞ்ச ஒதவியச் செய்யனும்ன்னு கேட்டோம்.


உடனே யோசிக்காமக்கூட டக்குன்னு சொன்னார் பாருங்க. அசந்து போயிட்டோம்ன்னார்,"அவர்.


"என்ன சொன்னார்?' இவர் கேட்டார்.


"நீச்சல் குளத்துக்கு ரெண்டு கொடம் தண்ணீர் மொத ஆளா நான் கொடுத்திர்றேன்னார்,"


செவ்வாய், 4 டிசம்பர், 2012

<>மனித இதயங்களை மாற்றிய வார்த்தைகள்!<>


அந்த மரத்தடியில் பார்வையிழந்த‌ சிறுவன் உட்கார்ந்திருந்தான்.  அவன் முன் ஒரு கந்தல் துண்டு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது.  நான்கு தெரு முனை சந்திக்கும்  இடத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். 

அய்யா,அம்மா தர்மம் பண்ணுங்க" என்று அவன் வாய் இடைவெளியில்லாமல் தானியங்கியாய்ச் சொல்லிக்கொண்டிருந்தது. அவனுக்கு அருகில் ஒரு தட்டியில் 'நான் பார்வையற்றவ‌ன். எனக்கு உதவுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. அவ‌ன் முன் இருந்த கந்தல் துண்டில் சிலர் போட்ட நாணயங்கள் சிதறிக் கிடந்தது.
.

அந்த வழியாக ஒரு மனிதன் கடந்து போனார். அப்போது சில நாணயங்களை எடுத்து அவன் முன் போட்டு விட்டு, அந்த சிறுவனின் பக்கத்தில் இருந்த தட்டியில் இருந்த எழுத்துக்களை அழித்துவிட்டு மாற்றி எதையோ எழுதினார். எழுதி முடித்ததும் கிளம்பிப் போனார்.


சற்று நேரத்தில் அவன் கந்தல் துண்டு நாணயங்களால் குவிய‌ ஆரம்பித்தது. சிலர் நின்று அவனுக்கு பணத்தைக் கொடுத்துச் சென்றார்கள். சாயங்கால வேளையில் அந்தத் தட்டியில் மாற்றி எழுதிய‌ மனிதர், அங்கே என்ன நடக்கிறது என்று அறிய வந்தார். 

அவரது காலடி சத்தத்தை கேட்டுணர்ந்த‌,  சிறுவன், 'ஐயா நீங்கள் யார்? நீங்கள் என்ன எழுதினீர்கள்? எனக்குக் காசும் பணமும் குவிகிறதே' என்று கேட்டான்.
.
அதற்கு அவர், 'நான் உண்மையைத்தான் எழுதினேன், நீ எழுதிவைத்திருந்த‌தையே சற்று மாற்றி எழுதினேன்' என்றார். அதற்கு சிறுவன் 'என்னதான் எழுதினீர்கள் அய்யா, சொல்லுங்கள்' என்றான். 

அதற்கு அவர், "இந்த நாள் இனிய நாள், அழகு மிகுந்த நாள், என்னால்தான் அதை பார்க்க முடியவில்லை" இதைத்தான் நான் எழுதினேன் என்றார்.
.
முன்பு அந்தப் பலகையில், 'நான் பார்வையற்றவ‌ன். எனக்கு உதவுங்கள்' ன்று மாத்திரமே எழுதியிருந்தது. ஆனால் மாற்றி எழுதப்பட்ட‌திலோ, "இதை காணும் மக்களாகிய நீங்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள், எனக்கு அந்தப் பாக்கியம் இல்லையே," என்று மக்களை அவர்களது பாக்கியத்தை உணர வைத்தது.
.
பிரியமானவர்களே, நமக்கு எப்போதும் இரண்டு கண்களும், எல்லா உறுப்புகளும் சரியாக இயங்குவதால் அது குறைவுப்பட்டிருப்பவர்கள் படும் வேதனைகளை நாம் உணர்வதில்லை. 

நமக்கு கிடைத்திருப்பது எல்லாம் தேவனுடைய கிருபைகள் அல்லவா? அதற்கு நாம் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டாமா? ஒவ்வொரு காரியத்திலும் நாம் அதை எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தில்தான் இருக்கிறது. 

நமக்கு எல்லாம் இருந்தும் நாம் குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம், எதுவும் இல்லாதிருந்தும் இயேசுவைத் துதித்தும் போற்றிக் கொண்டும்  இருக்கலாம். 

கண்கள் இல்லாதிருந்தும், அந்தச் சிறுவன் மற்றவர்களைக் காட்டிலும் எத்தனை மகிழ்ச்சியாயும், மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வாசகங்களைப் பார்க்கும்போது, இரண்டு கைகளும், இரண்டு கால்களும் எல்லா உறுப்புகளும் நமக்கு இருந்தும் நாம் எவ்வளவுக குறைபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நம்மைக் குறித்தே வெட்கப்படத் தோன்றும்.  

நாம் எப்போதும் குடத்திலிட்ட விளக்காய் இருப்பதைவிட மெழுகுவர்த்தியாய் இருக்க வேண்டும். தன்னையே உருக்கி பிறருக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தி போன்றவர்களாய் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.  அதுதான் இந்த உலகத்தில், நாம் வாழும் குறைந்த காலத்தில், நாம் விட்டுச் செல்லும் ஒளியாய், பிறருக்கான வழியாய் அமையும்!

- ஆல்பர்ட், அமெரிக்கா.