செவ்வாய், 4 டிசம்பர், 2012

<>மனித இதயங்களை மாற்றிய வார்த்தைகள்!<>


அந்த மரத்தடியில் பார்வையிழந்த‌ சிறுவன் உட்கார்ந்திருந்தான்.  அவன் முன் ஒரு கந்தல் துண்டு ஒன்று விரிக்கப்பட்டிருந்தது.  நான்கு தெரு முனை சந்திக்கும்  இடத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். 

அய்யா,அம்மா தர்மம் பண்ணுங்க" என்று அவன் வாய் இடைவெளியில்லாமல் தானியங்கியாய்ச் சொல்லிக்கொண்டிருந்தது. அவனுக்கு அருகில் ஒரு தட்டியில் 'நான் பார்வையற்றவ‌ன். எனக்கு உதவுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. அவ‌ன் முன் இருந்த கந்தல் துண்டில் சிலர் போட்ட நாணயங்கள் சிதறிக் கிடந்தது.
.

அந்த வழியாக ஒரு மனிதன் கடந்து போனார். அப்போது சில நாணயங்களை எடுத்து அவன் முன் போட்டு விட்டு, அந்த சிறுவனின் பக்கத்தில் இருந்த தட்டியில் இருந்த எழுத்துக்களை அழித்துவிட்டு மாற்றி எதையோ எழுதினார். எழுதி முடித்ததும் கிளம்பிப் போனார்.


சற்று நேரத்தில் அவன் கந்தல் துண்டு நாணயங்களால் குவிய‌ ஆரம்பித்தது. சிலர் நின்று அவனுக்கு பணத்தைக் கொடுத்துச் சென்றார்கள். சாயங்கால வேளையில் அந்தத் தட்டியில் மாற்றி எழுதிய‌ மனிதர், அங்கே என்ன நடக்கிறது என்று அறிய வந்தார். 

அவரது காலடி சத்தத்தை கேட்டுணர்ந்த‌,  சிறுவன், 'ஐயா நீங்கள் யார்? நீங்கள் என்ன எழுதினீர்கள்? எனக்குக் காசும் பணமும் குவிகிறதே' என்று கேட்டான்.
.
அதற்கு அவர், 'நான் உண்மையைத்தான் எழுதினேன், நீ எழுதிவைத்திருந்த‌தையே சற்று மாற்றி எழுதினேன்' என்றார். அதற்கு சிறுவன் 'என்னதான் எழுதினீர்கள் அய்யா, சொல்லுங்கள்' என்றான். 

அதற்கு அவர், "இந்த நாள் இனிய நாள், அழகு மிகுந்த நாள், என்னால்தான் அதை பார்க்க முடியவில்லை" இதைத்தான் நான் எழுதினேன் என்றார்.
.
முன்பு அந்தப் பலகையில், 'நான் பார்வையற்றவ‌ன். எனக்கு உதவுங்கள்' ன்று மாத்திரமே எழுதியிருந்தது. ஆனால் மாற்றி எழுதப்பட்ட‌திலோ, "இதை காணும் மக்களாகிய நீங்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள், எனக்கு அந்தப் பாக்கியம் இல்லையே," என்று மக்களை அவர்களது பாக்கியத்தை உணர வைத்தது.
.
பிரியமானவர்களே, நமக்கு எப்போதும் இரண்டு கண்களும், எல்லா உறுப்புகளும் சரியாக இயங்குவதால் அது குறைவுப்பட்டிருப்பவர்கள் படும் வேதனைகளை நாம் உணர்வதில்லை. 

நமக்கு கிடைத்திருப்பது எல்லாம் தேவனுடைய கிருபைகள் அல்லவா? அதற்கு நாம் அவருக்கு நன்றியோடு இருக்க வேண்டாமா? ஒவ்வொரு காரியத்திலும் நாம் அதை எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தில்தான் இருக்கிறது. 

நமக்கு எல்லாம் இருந்தும் நாம் குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம், எதுவும் இல்லாதிருந்தும் இயேசுவைத் துதித்தும் போற்றிக் கொண்டும்  இருக்கலாம். 

கண்கள் இல்லாதிருந்தும், அந்தச் சிறுவன் மற்றவர்களைக் காட்டிலும் எத்தனை மகிழ்ச்சியாயும், மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வாசகங்களைப் பார்க்கும்போது, இரண்டு கைகளும், இரண்டு கால்களும் எல்லா உறுப்புகளும் நமக்கு இருந்தும் நாம் எவ்வளவுக குறைபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நம்மைக் குறித்தே வெட்கப்படத் தோன்றும்.  

நாம் எப்போதும் குடத்திலிட்ட விளக்காய் இருப்பதைவிட மெழுகுவர்த்தியாய் இருக்க வேண்டும். தன்னையே உருக்கி பிறருக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தி போன்றவர்களாய் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.  அதுதான் இந்த உலகத்தில், நாம் வாழும் குறைந்த காலத்தில், நாம் விட்டுச் செல்லும் ஒளியாய், பிறருக்கான வழியாய் அமையும்!

- ஆல்பர்ட், அமெரிக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக